Headlines

தண்டவாளத்தில் சிக்கிய பேருந்து : ஓட்டுநரால் தவிர்க்கப்பட்ட விபத்து

தண்டவாளத்தில் சிக்கிய பேருந்து : ஓட்டுநரால் தவிர்க்கப்பட்ட விபத்து

உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் ரயில்வே கேட்டில் 40 பயணிகளுடன் வந்த அரசு பேருந்து இரும்பு கம்பத்தில் சிக்கி தண்டவாளத்தில் நின்றது. அப்போது கொல்லம் எக்ஸ்பிரஸ் வர சிக்னல் போடப்பட்டதால் பதட்டம் ஏற்பட்ட நிலையில் ஓட்டுநர் பயணிகளை இறக்கி பேருந்தை சாமர்த்தியமாக மீட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது.

நேற்று இரவு 7 மணிக்கு விரைவு ரயில் ஒன்று செல்வதற்காக கேட் போடப்பட்டது. பின்னர் ரயில் சென்ற பிறகு கேட் திறக்கப்பட்ட நிலையில், இரண்டு பக்கங்களிலும் அணிவகுத்து நின்ற வாகனங்கள் ரயில்வே கேட்டை கடந்து கொண்டிருந்தன.

அப்போது விழுப்புரத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த அரசு பேருந்து ஒன்று ரயில்வே கேட் மீது மோதி இரும்பு கம்பத்தில் சிக்கி தண்டவாளத்தில் நின்றது.

சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக கம்பத்தில் சிக்கிய பேருந்தை எடுக்க முடியாமல் ஓட்டுநர் திணறினார்.

அச்சமயத்தில் தாம்பரத்தில் இருந்து கொல்லம் செல்லும் கொல்லம் எக்ஸ்பிரஸ் வருவதற்கு சிக்னல் போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.

உடனடியாக ஓட்டுநர் பயணிகளை பேருந்தில் இருந்து வெளியேறுமாறு கூறியதால், பயணிகள் பதற்றத்துடன் இறங்கி ஓடினர்.

பிறகு ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் அரசு பேருந்து இரும்பு கம்பத்தை உடைத்துக் கொண்டு தண்டவாளத்தை விட்டு வெளியே வந்தது.

அதன்பிறகு கேட் போடப்பட்டு கொல்லம் எக்ஸ்பிரஸ் தாமதமின்றி சென்றது.

ரயில் வருவதை அறிந்த ஓட்டுநர் பயணிகளை உடனடியாக இறக்கி, சிக்கிக்கொண்ட பேருந்தை சாமர்த்தியமாக மீட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *