Headlines

இயற்கை மருத்துவரை தாக்கி கார், பணம் பறிப்பு : மனைவி உள்பட 3 பேர் அதிரடி கைது

இயற்கை மருத்துவரை தாக்கி கார், பணம் பறிப்பு : மனைவி உள்பட 3 பேர் அதிரடி கைது

கோவை:
கோவையில் குடும்பத் தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக, இயற்கை மருத்துவரை வீட்டில் புகுந்து கொடூரமாக தாக்கி ரூ.2.50 லட்சம் ரொக்கம், செல்போன்கள் மற்றும் சொகுசு காரை பறித்துச் சென்ற வழக்கில், அவரது மனைவி உள்பட 3 பேரை வடவள்ளி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கோவை வடவள்ளி நியூ தில்லை நகரைச் சேர்ந்தவர் கிரிதரன் (வயது 47). இயற்கை மருத்துவம் முடித்துள்ள இவர், தனது வீட்டிலேயே யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மையம் நடத்தி வருகிறார். இவருக்கும் கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவருக்கும் கடந்த 2018-ல் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், பொள்ளாச்சியில் இவர்கள் நடத்தி வந்த ‘இறை பவுண்டேஷன்’ அறக்கட்டளை விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கடந்த 26-ஆம் தேதி காலை மகாலட்சுமி, அவரது ஆதரவாளர்களான பிரகாஷ், அவரது மனைவி சௌகார்த்திகா மற்றும் 3 பேர் கொண்ட கும்பல் கிரிதரனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவை அடித்து உடைத்த அக்கும்பல், கிரிதரனை சரமாரியாக தாக்கி கீழ்த்தள படுக்கையறையில் அடைத்தது.
அப்போது
பின்னர் கிரிதரனை மிரட்டி வெற்றுப் பத்திரங்கள், காசோலைகளில் கையெழுத்துப் பெற்றதுடன், ‘ஜி-பே’ வழியாக ரூ.50 ஆயிரத்தை மகாலட்சுமியின் கணக்கிற்கு மாற்றினர். மேலும் வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் ரொக்கம், 3 செல்போன்கள் மற்றும் அவரது ‘டஸ்டர்’ காரையும் மிரட்டி பறித்துக்கொண்டு, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். பலத்த காயமடைந்த கிரிதரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் வடவள்ளி போலீசில் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைத் தேடி வந்த தனிப்படை போலீசார், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கிரிதரனின் மனைவி மகாலட்சுமி, அவருடன் கூட்டுச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சௌகார்த்திகா ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட சொகுசு கார், ஆவணங்கள் மற்றும் பணம் ஆகியவற்றை மீட்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள இவர்களது கூட்டாளிகளான 3 பேரை போலீசார் தொடர்ந்து வலைவீசித் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *