7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தருமபுரி போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோபிநாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காரிக்குட்டி, 61. கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு தனியாக இருந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி சோகமாக இருந்ததைக் கண்ட பெற்றோர் விசாரித்த போது, நடந்த சம்பவம் குறித்து தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் காரிக்குட்டியை பிடித்து விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தருமபுரி மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின் முடிவில் காரிக்குட்டி மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு உறுதியானது.
இதையடுத்து அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அசின்பானு நேற்று தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலா ஆஜராகி வாதாடினார்.
