திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள கோமணாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு இருந்தது.இந்த விநாயகர் சிலை ஊர்வலம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
அப்போது, கிராமத்தின் ஊர் மந்தை பகுதியில் விநாயகர் சிலையை ஏற்றி வந்த வாகனத்தை திருப்பியபோது, அங்கு இருந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும்,ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர் இதில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த கனகராஜ் (31), பூபதி கண்ணன் (24) உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர். காயமடைந்த கனகராஜ், பூபதிகண்ணன் ஆகிய இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து, தங்கள் தரப்பினர் தாக்கப்பட்டதாகக் கூறி பட்டியல் சமூக மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையின மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தாக்குதல் நடத்திய நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிடப்பட்டு, விநாயகர் சிலை ஊர்வலம்தொடர்ந்து நடைபெற்றது.
அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கோமணாம்பட்டி கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
