நாகூர் தர்காவில் நடைபெற்ற இந்து மத முறைப்படி நடந்த திருமணம் தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில், கடந்த செப்டம்பர் 13, 2026 அன்று இந்து குடும்பத்தைச் சேர்ந்த மணமக்களின் திருமண நிகழ்வு நடைபெற்றது. குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ, சுபமுகூர்த்த நேரத்தில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில், தர்கா நிர்வாகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெரியோர்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
நாகூர் தர்கா நிர்வாக தலைவர் மற்றும் பரம்பரை அறங்காவலர் முகமது கலிபா சாஹிப் உள்ளிட்டோர் மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். திருமண நிகழ்வில் மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்திய காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.
ஒரே நாளில் 3 காது குத்து நிகழ்ச்சிகள்
இதுமட்டுமின்றி, அதே நாளில் நாகூர் தர்காவில் இந்து குடும்பங்களைச் சேர்ந்த மூன்று குழந்தைகளுக்கான காது குத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்றதாக தர்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதே நாளில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் நிக்காஹ் நிகழ்ச்சிகளும் நடைபெற இருந்ததாக தர்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் ஒரே இடத்தில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த குடும்பங்கள் தங்களது பாரம்பரிய நிகழ்வுகளை நடத்துவது நாகூர் தர்காவின் தனித்துவமான சமூகப் பண்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
பல நூற்றாண்டுகளாக தொடரும் மதநல்லிணக்கம்
நாகூர் தர்கா என்பது இஸ்லாமியர்களுக்கான வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல; பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் வந்து வழிபடும் இடமாகவும் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
தமிழ்நாடு சுற்றுலாத்துறையும் நாகூர் தர்காவை மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் அடையாளம் எனக் குறிப்பிடுகிறது. பல்வேறு மதங்களைச் சேர்ந்த பக்தர்கள் இங்கு வந்து வழிபடுவது வழக்கமான ஒன்று என சுற்றுலாத்துறை குறிப்பிடுகிறது.
நாகூர் தர்காவின் மதநல்லிணக்க பாரம்பரியம் குறித்து ஆய்வு செய்த ஆக்ஸ்போர்டு அகாடமிக் வெளியீட்டிலும், ஷாஹுல் ஹமீது தர்கா நீண்டகாலமாக இந்து–முஸ்லிம் சமூகங்களுக்கிடையேயான பகிரப்பட்ட ஆன்மிக இடமாக இருந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாற்று தகவல்களின்படி, நாகூர் தர்காவின் வளர்ச்சியில் இந்து அரசர்களும், இந்து பக்தர்களும் முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளனர். குறிப்பாக தர்காவின் முக்கியமான கட்டிடங்களிலும் இந்து ஆட்சியாளர்களின் பங்களிப்பு இருந்ததாக வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
“இது தாங்க நாங்க…”
இந்த நிகழ்வு குறித்து நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலரும் ஆலோசனைக் குழு தலைவருமான கலிபா சாஹிப் வெளியிட்டுள்ள கருத்தில்,
“நாகப்பட்டினம் மாவட்டம் என்றாலே மதநல்லிணக்கம் தான். அதிலும் நாகூர் தர்கா என்றாலே ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது. இந்து சகோதரரின் திருமணம் குடும்பத்தினர், நண்பர்கள் படை சூழ இஸ்லாமிய பெரியோர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
இது நாகூர் தர்காவில் வழக்கமாக நடைபெறும் நிகழ்வுதான். ஆனால் தற்போதைய சூழலில் இத்தகைய நிகழ்வுகளை வீடியோவாக பகிர்ந்து ‘இதுதாங்க நாங்க’ என்று சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த நல்லிணக்கத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது.
இத்தகைய ஒற்றுமை நம்மிடையே இருக்கும் வரை, நம் பிரிவில் குளிர்காய நினைப்பவர்களுக்கு இடமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் காட்சிகள்
இந்து குடும்பத்தின் திருமண நிகழ்வும், தர்கா நிர்வாகத்தினர் மணமக்களை வாழ்த்தும் காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
மத அடையாளங்களைத் தாண்டி மக்கள் ஒன்றாக வாழும் நாகூர் பகுதியின் பாரம்பரியத்தை இந்த காட்சிகள் மீண்டும் நினைவுபடுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“மதம் வேறாக இருக்கலாம்; மனிதநேயம் ஒன்றுதான்” என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில், நாகூர் தர்காவில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வு மதநல்லிணக்கத்தின் மற்றொரு அடையாளமாக பார்க்கப்படுகிறது.
