Headlines

ஈரானிய கடற்கொள்ளையர்களால் கொல்லப்பட்ட மீனவர்களின் உடலுக்கு அமைச்சர் ஸ்ரீநாத் அஞ்சலி

ஈரானிய கடற்கொள்ளையர்களால் கொல்லப்பட்ட மீனவர்களின் உடலுக்கு அமைச்சர் ஸ்ரீநாத் அஞ்சலி

சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தபோது ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்களின் உடல்கள் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த்து. தமிழக அரசின் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மாவீரன் மற்றும் கீழமூவர்கரையைச் சேர்ந்த சங்கர் ஆகிய இருவரும் சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஈரானிய கடற்கொள்ளையர்கள் நடத்திய கொடூர துப்பாக்கிச்சூட்டில் மாவீரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த சங்கர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த இரண்டு மீனவர்களின் உடல்களை விரைவில் சொந்த ஊருக்குக் கொண்டுவர தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. அரசின் தொடர் நடவடிக்கைகளின் பலனாக, விமானம் மூலம் இருவரின் உடல்களும் இன்று திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உடனடியாகத் தலா ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட மீனவர்கள் மாவீரன் மற்றும் சங்கர் ஆகியோரின் உடல்களுக்கு, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த மீனவர்களின் குடும்ப உறுப்பினர்களைக் கட்டித் தழுவி தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இறந்தவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *