பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார் மற்றும் ராஜீவ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து இரு அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் நிர்மல் குமார், முதலமைச்சரின் உத்தரவின்படி பூலித்தேவனின் பிறந்தநாளில் அவரது சிலைக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தியதாக தெரிவித்தார்.
“குவாரிகளில் 90 சதவீத கணக்குகள் காட்டப்படவில்லை”
குவாரிகள் தொடர்பாக கடந்த கால ஆட்சியில் 10 சதவீதம் மட்டுமே கணக்கு காட்டப்பட்டதாகவும், 90 சதவீதம் கணக்கு காட்டப்படாமல் இருந்ததாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.
மதுரை உள்ளிட்ட நகரங்களில் 100 குவாரிகள் இருந்தால், ஒன்று அல்லது இரண்டு குவாரிகளைத் தவிர பெரும்பாலான குவாரிகள் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அரசுக்கு வரவேண்டிய வருவாயில் இரண்டு சதவீதம் மட்டுமே அரசுக்கு வந்து சேர்ந்ததாகவும், மீதமுள்ள 98 சதவீதம் முறைகேடாக வேறு நபர்களுக்கு சென்றதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.
அரசு அனுமதித்த அளவில் மட்டுமே குவாரிகளில் கனிமங்களை வெட்டி எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகவும், உரிய ஆவணங்கள் இருந்தால் அனுமதி வழங்கவும், நிலுவையில் உள்ள அபராதங்களை உடனடியாக செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
“ஒவ்வொரு மாவட்டத்திலும் வசூல்” – அமைச்சர் குற்றச்சாட்டு
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைச்சர்கள் குறுநில மன்னர்கள் போல ஆட்களை நியமித்து வசூல் செய்து வந்ததாகவும், இனி இதுபோன்ற நிலை இருக்காது என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
மணல் குவாரிகள் செயல்பட்ட காலத்தில் மாதத்திற்கு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் சட்டவிரோதமாக கிடைத்ததாகவும், அரசுக்கு சொற்ப வருவாய் மட்டுமே கிடைத்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், முறையாக ஜிஎஸ்டி செலுத்தப்படவில்லை என்றும், ஆயிரம் லாரிகள் இயக்கப்பட்டாலும் ஒரு லாரிக்கு கூட முறையாக ஜிஎஸ்டி செலுத்தப்படாத நிலை இருந்ததாகவும் தெரிவித்தார்.
“பல ஆயிரம் கோடி எங்கே சென்றது?”
இந்த முறைகேடுகளை அமலாக்கத்துறை சுட்டிக்காட்டி வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடாக பெறப்பட்டதாக கூறப்படும் பணம் எங்கே சென்றது என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் குவாரிகளை முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த நடவடிக்கைகளுக்கு மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம் என்றும் கூறினார்.
தமிழகத்தின் இயற்கை வளங்களை முறைகேடாக எடுத்துச் சென்று அண்டை மாநிலங்களில் விற்பனை செய்வதை முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேட்டூர் அணை நீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகளிடம் பலமுறை ஆலோசனை நடத்திய பிறகே அவர்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் இன்று நேரில் சென்று தண்ணீர் திறந்து வைப்பதாக தெரிவித்தார்.
கர்நாடகா தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை முறையாக திறக்கவில்லை என்றும், நீதிமன்றத்தை நாடி தண்ணீரை பெற்றுள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
“கூட்டணிக்குள் குழப்பம் இல்லை”
அடுத்த சட்டமன்றத் தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், கடந்த ஆண்டு தங்களது கட்சித் தலைவர் முதலமைச்சராவார் என எந்த ஊடகங்களும் தெரிவிக்கவில்லை என்றும், அது இயற்கையாகவே அமைந்தது என்றும் கூறினார்.
அதேபோல் எதிர்காலத்திலும் இயற்கையான சூழல் உருவாகும் என தெரிவித்த அவர், இன்னும் மூன்று ஆண்டுகள் இருப்பதால் தற்போது அதுகுறித்து பேச வேண்டாம் என்றார்.
தங்களது கூட்டணிக்குள் எந்தவித குழப்பமும், முரண்பாடும் இல்லை என்றும் அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத்தில் நடைபெறும் விவாதங்கள் மூலம் மக்களுக்கு பல்வேறு தகவல்கள் தெரியவருவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்றனர்
சட்டமன்றத்தில் ஊழல் குறித்து பேசினாலே திமுகவினர் எழுந்து நிற்பதாகவும், “அவர்கள் ஊழல் செய்யவில்லையா? எந்த தவறும் செய்யவில்லையா?” என கேள்வி எழுப்பினார்.
மதுரை மாநகராட்சியில் எதுவும் நடைபெறாதது போல திமுகவினர் பேசுவதாகவும், வழக்கு தானாகவே பதிவு செய்யப்பட்டதைப் போல கூறுவதாகவும் அவர் விமர்சித்தார்.
நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல விவகாரத்தை மறைக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.
கடந்த அரசு எவ்வாறு செயல்பட்டது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.
“மது விற்பனையில் ரூ.5,000 கோடி முறைகேடு?”
மதுபானக் கடைகளில் நடைபெற்ற விற்பனை தொடர்பாகவும் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மது கடைகளில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை நடைபெற்றிருந்தால், ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் என்ற அளவில் கணக்கிட்டாலும் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என தெரிவித்தார்.
“அந்த 5 ஆயிரம் கோடி ரூபாய் என்ன செய்தார்கள் என்பதுதான் எங்களுடைய கேள்வி” என்றும் அமைச்சர் கூறினார்.
சட்டவிரோதமாக பெறப்பட்டதாக கூறப்படும் அந்தப் பணத்தை முறையான பணமாக மாற்றுவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
முதலமைச்சர் மேசையில் 3 ஊழல் கோப்புகள்?
முதலமைச்சரின் மேசையில் ஊழல் தொடர்பான மூன்று கோப்புகள் இருப்பதாகவும், அவை குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
விசாரணையின் அடிப்படையில் முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் கூறினார்.
EB டெண்டர் முறைகேடு குறித்து விசாரணை
மின்வாரியத்தின் EB டெண்டர் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் பலர் தொடர்புடையதாக கூறப்படும் நிலையில், எந்தெந்த துறைகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதோ, அவை அனைத்தும் முறையாக விசாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
“தமிழகத்தின் மின் தேவை 21 ஆயிரம் மெகாவாட்”
தூத்துக்குடி அனல் மின் நிலையம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், தமிழகத்தின் தற்போதைய மின் தேவை சுமார் 21 ஆயிரம் மெகாவாட் என தெரிவித்தார்.
ஆனால் தமிழக மின்சார வாரியம் சார்பில் சுமார் 4 ஆயிரம் மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாகவும், மீதமுள்ள மின்சாரம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் விலைக்கு வாங்கப்படுவதாகவும் கூறினார்.
இதனை சீரமைக்கவே புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் கொண்டுவரப்படுவதாகவும் தெரிவித்தார்.
“இரவில் சோலார் மூலம் மின் உற்பத்தி செய்ய முடியாது”
இரவு நேரங்களில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது என்பதால், அனல் மின் நிலையங்கள் அவசியம் என அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் நீர்மின் மற்றும் அனல் மின் உற்பத்தி நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட குறைவாக இருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, மின் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
