Headlines

காவிரி நீர் விவகாரம்: டெல்லி செல்ல முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தம், திருச்சியில் பரபரப்பு

காவிரி நீர் விவகாரம்: டெல்லி செல்ல முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தம், திருச்சியில் பரபரப்பு

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து, இந்திய குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளிப்பதற்காக டெல்லி செல்ல முயன்ற தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான 50 விவசாயிகள் திருச்சியில் இன்று அதிகாலை தடுத்து நிறுத்தப்பட்டனர்.

தடுத்து நிறுத்தப்பட்ட விவசாயிகள் திருச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு முறையாக பின்பற்றவில்லை என குற்றம்சாட்டியுள்ள விவசாயிகள், இதனால் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டஈடு வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திட்டமிட்டிருந்தனர்.

மேலும், காவிரி நீர் விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், டெல்லி செல்ல முயன்ற விவசாயிகள் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *