அரியலூர் அருகே ஏரிக் கரையை உடைத்து விட்டதால் சோளம் விதைத்த நிலத்திற்குள் ஏரித்தண்ணீர் உட்புகுந்து 20 ஏக்கர் பரப்பளவில் விதைக்கப்பட்டிருந்த விதை சோளம் வீணாகியதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர் .
அரியலூர் நகராட்சியை ஒட்டியுள்ளது அம்மா குளம் கிராமம். இங்குள்ள விவசாய நிலத்தில் விவசாயிகள் முத்து சோளத்தை விதைத்து அதன் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்துவது வழக்கம்.
சில நாட்களுக்கு முன்பு தங்களது விவசாய நிலங்களை உழுது முத்து சோளம் விதைத்து முளைத்து வரும் நிலையில் உள்ளது. இந்நிலையில் முத்துச்சோள வயல்களை ஒட்டி உள்ள தொறடேரியை சில நபர்கள் உடைத்து விட்டுள்ளனர்.
இதனால் ஏரி நீர் சுமார் 20 ஏக்கர் அளவிற்கு விதைக்கப்பட்டிருந்த முத்து சோளம் முற்றிலுமாக நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஒருபுறம் விதைத்த முத்து சோளம் வீணான நிலையில் தங்களது நிலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தவுத்தாய் குளம் கிராமத்தில் அமைந்துள்ள தொறடேரியில் சிலர் மீன் குத்தகை ஏலம் எடுத்திருந்ததாகவும், மீன் பிடிப்பதற்கு ஏற்ப ஏரி தண்ணீரை முன்னறிவிப்பு ஏதும் இன்றி ஜேசிபி இயந்திரம் மூலம் வெளியேற்றுவதற்காக ஏரி கரையில் உடைப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது
மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை விசாரித்து ஏரியை அனுமதி இன்றி உடைத்து விட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி தண்ணீர் விவசாய நிலத்தில் உட்புகுந்து ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு பெற்று தர வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
