கரூர் மாவட்டம்,குளித்தலை அருகே வரவனை ஊராட்சி பாப்பனம்பட்டியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து கடவூர் தாசில்தார் பானுமதி தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள்,சிந்தாமணிப்பட்டி போலீசார்,நில அளவையர் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அரசு நத்தம் புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளதா? என்று அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் உள்ள பகுதியை ஜேசிபி இயந்திரத்தை கொண்டு அகற்ற முற்பட்டனர்.
அப்பொழுது அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினரின் 12 வீடுகள் இப்பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ளது. அவற்றை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, பின்னர் எங்கள் பகுதியில் வந்து அகற்ற வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து திருமுருகன் என்பவர் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொள்வதாக முயற்சித்துள்ளார்.
போலீசார் உடனடியாக உடலில் தண்ணீரை ஊற்றி, மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி அப்புறப்படுத்தினர். அவரது குடும்பத்தினர் தொடர்ந்து தகராறு செய்ததால்,அவர்களை சிந்தாமணிப்பட்டி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அரசு நத்தம் புறம்போக்கு பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
