கோயம்புத்தூர் மாவட்டம், ஆலாந்துறை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ஈஷா யோகா மையத்திற்கு, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அடகட்லா சிவப்பிரசாத் (26) என்பவர், நேற்று காலை 08.00 மணியளவில் இரண்டு நாட்கள் தங்குவதற்காக ஆன்லைன் முன்பதிவு செய்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்துவிட்டு, மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், மாலை 15.30 மணியளவில் வெல்கம் பாயிண்ட் பகுதியில் அத்துமீறி உள்ளே நுழைய முயன்ற அவரை, ஈஷா பாதுகாப்புப் பணியாளர்கள் யோகேஸ்வரன், சஜித் மற்றும் முருகேசன் ஆகியோர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது, சிவப்பிரசாத் தனது பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி, தகாத வார்த்தைகளால் பேசியதுடன் மிரட்டல் விடுத்துள்ளார். பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை மடக்கிப் பிடித்து ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை அழைத்துச் சென்றனர்.
இதுதொடர்பாக ஈஷா பாதுகாப்புப் பொறுப்பாளர் யோகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், தகாத வார்த்தைகளால் பேசியது, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிவப்பிரசாத் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
மேலும், பேரூர் டிஎஸ்பி சுரேஷ் தெரிவித்ததன்படி, முதற்கட்ட விசாரணையில் சிவப்பிரசாத் டிப்ளமோ வரை படித்துவிட்டு மும்பையில் பணிபுரிந்து வருவதும், இவருக்கு ஒரு தம்பி இருப்பதும், கடந்த சில ஆண்டுகளாக மனநல பாதிப்புக்காக பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது.
