திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் பகுதியில் இருந்து ஆரணி செல்லும் சாலையில், சுமார் 20 நிமிடங்கள் பெய்த கனமழையால் பல ஆண்டுகள் பழமையான புளியமரம் மற்றும் வேப்பமரங்கள் என தொடர்ந்து 5 இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்தன.
மரங்கள் விழுந்ததில் ஒரு ஆட்டோ மற்றும் 2-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மேலும், மரம் விழுந்ததில் முதியவர் ஒருவருக்கு இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனால் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டு, பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பேருந்து வசதி கிடைக்காமல் பயணிகள் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பேருந்தில் ஏறும் நிலை ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
