உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் ஸ்டாண்ட் இல்லாமல் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் குளுக்கோஸ் பாட்டிலை கையில் பிடித்தபடி சிகிச்சை பெறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினசரி 1500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்லும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை, சென்னை – சேலம் – திருச்சி – மதுரை ஆகிய மையப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் விபத்தில் சிக்குபவர்களுக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கும் முக்கிய மருத்துவமனையாக உள்ளது. இதனால் எப்போதுமே கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அப்போது போதிய குளுக்கோஸ் ஸ்டாண்ட் இல்லாததால், நோயாளிகள் குளுக்கோஸ் பாட்டிலை கையில் தூக்கிப்பிடித்தபடி சிகிச்சை பெற்றனர்.
சிலருக்கு உடன் வந்த உதவியாளர்கள் பாட்டிலை பிடித்துக்கொண்டிருந்தனர்.
கையில் பிடித்துக்கொண்டிருந்தபோது கை வலித்ததால் பாட்டிலை கீழே இறக்கியபோது, குளுக்கோஸ் இறங்காமல் இரத்தம் மேலே ஏறி பாட்டிலுக்குள் சென்றதால் நோயாளிகள் பதற்றமடைந்தனர்.
இதனை தொடர்ந்து மீண்டும் பாட்டிலை மேலே தூக்கிப்பிடித்தபடி குளுக்கோஸ் ஏற்றிக்கொண்டனர்.
தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனை என்று கூறப்படும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் இத்தகைய அடிப்படை வசதி கூட இல்லாதது வேதனை அளிக்கிறது.
நோயாளிகள் கையில் குளுக்கோஸ் பாட்டிலை பிடித்துக்கொண்டு சிகிச்சை பெறும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
