Headlines

ஆற்றில் கொட்டப்படும் அரசு மருத்துவமனை கழிவுகள் – பொதுமக்கள் புகார்

ஆற்றில் கொட்டப்படும் அரசு மருத்துவமனை கழிவுகள் – பொதுமக்கள் புகார்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி – வேதாரண்யம் சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் உள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள், மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவக் கழிவுகள் மருத்துவமனையின் பின்புறம் உள்ள முள்ளியாற்றில் கொட்டப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இதேபோன்று மருத்துவக் கழிவுகள் ஆற்றில் கொட்டப்பட்டு வருவதாகவும், இதனால் கழிவுகள் ஆற்று நீரில் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த ஆற்று நீர் விவசாய நிலங்களுக்கும் பாய்ச்சப்படுவதால், விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்படும்.

மருத்துவமனைக்கு அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளும், மருத்துவக் கழிவுகள் காரணமாக துர்நாற்றம் வீசுவதாகவும், அடிக்கடி பன்றிகள் சுற்றித் திரிவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெறுவதற்காக பொதுமக்கள் மருத்துவமனைக்கு வருகின்றனர். ஆனால், பொதுமக்களின் உடல்நலத்தை பாதுகாக்க வேண்டிய மருத்துவமனையே நோய் பரப்பும் இடமாக மாறி வருவது மிகவும் வேதனைக்குரியது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவக் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் நீர்நிலையில் கொட்டப்படுவது பொதுமக்களின் உடல்நலத்திற்கு அச்சுறுத்தலாக மாறிவிடும்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, ஆற்றில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை அகற்றி, அப்பகுதியை முழுமையாக சுத்தம் செய்வதுடன், இனிவரும் காலங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டக் கூடாது என நடவடிக்கை எடுக்க வேண்டும்
என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *