ராணிப்பேட்டை மாவட்டம், பானாவரம் அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்விச் சீர்வரிசை வழங்கும் பெருவிழா மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவையொட்டி, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் மற்றும் பள்ளி நலனில் அக்கறை கொண்டவர்கள் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பில் வழங்கினர். மாட்டுவண்டியை அலங்கரித்து கல்விச் சீர்வரிசை பொருட்கள் வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அந்தப் பொருட்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் தனஞ்செயனுக்கு விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்து வாழ்த்தினர். மேலும், பள்ளியில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் தலைமை ஆசிரியர் தனஞ்செயன் பேசுகையில், “மாணவர்களின் வாழ்க்கையை உயர்த்துவதில் கல்விக்கு மிக முக்கியமான பங்கு உள்ளது. கல்வி என்பது வெறும் பாடங்களை கற்றுக்கொள்வது மட்டுமல்ல; மாணவர்களின் சிந்தனைத் திறன், தன்னம்பிக்கை, ஒழுக்கம், அறிவு மற்றும் திறமைகளை வளர்த்து, எதிர்காலத்தை சிறப்பாக அமைப்பதற்கான அடித்தளமாகும்.ஒரு குடும்பத்தின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கும், ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் கல்வியே முக்கிய கருவியாக விளங்குகிறது.
நல்ல கல்வியைப் பெறும் மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை மட்டுமல்லாமல், தங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியும். கல்வி பெற்ற தலைமுறையே நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமையும்.அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்குவது பாராட்டுக்குரியது.
மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் கற்றல் திறனையும், பள்ளியின் கல்விச் சூழலையும் மேம்படுத்த முடியும். மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, உயர்கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் ஒழுக்கத்துடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டால் அவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும்” என்றார்.
விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
