Headlines

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் உதவியாளர் கைது : தனிப்படை போலீசார் அதிரடி

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் உதவியாளர் கைது : தனிப்படை போலீசார் அதிரடி

ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணியின் உல்லாசத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்த கணேசன் என்பவரை விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி தலைமையிலான தனிப்படை கைது செய்துள்ளனர். அவரின் செல்போனில் உள்ள வீரமணியின் உல்லாச வீடியோக்களின் உண்மை தன்மை குறித்து, தடயவியல் துறை அதிகாரிகள் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.

பிரபல ஜெம் கிரானைட் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி (84) சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது விபசார தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த மாதம் 29ம் தேதி கைது செய்தனர்.
சிறுமிகளை வீரமணியிடம் அழைத்து வந்து விட்டதாக அவரது தோழியான சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கில் வீரமணியை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும், வீரமணிக்கு சிறுமிகளை அழைத்து வந்து விட்ட சாந்தி அளித்த வாக்குமூலத்தின்படி 9 பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும், இந்த வழக்கில் வீரமணி சிறுமிகள் மற்றும் இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த போயஸ் கார்டன் அருகே உள்ள பங்களா வீட்டில் அனைத்து பணிகளையும் கணேசன் என்பவர் செய்து வந்ததும், வீரமணிக்கு இவர் பர்சனல் உதவியாளராக இருந்ததும் தெரியவந்தது.

வீரமணியின் ஜெம் கிரானைட்டில் 23 ஆண்டுகள் பறியாற்றி வந்ததும், இவர் தற்போது பாலாஜி குளோபல் எண்டர்பிரைசசில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

கடந்த 2019ம் ஆண்டு சாந்திக்கும், வீரமணிக்கும் சொத்து தகராறு வந்த பிறகு, கணேசன் சாந்திக்கு ஆதரவாக இருந்துள்ளார். இதனால் வீரமணி கணேசனை வேலையில் இருந்து நீக்கியுள்ளார். பிறகு கணேசன் சாந்தி உதவியுடன் பாலாஜி குளோபல் எண்டர் பிரைசில் வேலைக்கு சென்றதும் தெரியவந்தது. இதனால் வீரமணியை பழிவாங்கும் நோக்கில் கணேசன், சாந்தி ஆலோசனைப்படி சிறுமிகளுடன் வீரமணி இருக்கும் வீடியோக்கள் சிலவற்றை ரகசியமாக எடுத்து வைத்திருந்ததும் அதுகுறித்து கணேசன் சாந்தியிடம் கூறி இருந்ததும் தெரியவந்தது. இந்த தகவல்கள் சாந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது போலீசாருக்கு தெரியவந்தது.

அதைதொடர்ந்து கணேசன் தனது செல்போனில் வீரமணி சிறுமியிடம் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோவை வைத்திருந்தது, அதை பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காத குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து, விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு கணேசனை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, அதில், வீரமணி தொடர்பான உல்லாச வீடியோக்களின் உண்மை தன்மை குறித்து விபசார தடுப்பு பிரிவு அதிகாரிகள் தடயவியல் துறை அதிகாரிகள் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.

பின்னர் நடத்திய விசாரணையில் கணேசன் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: வீரமணியின் தோழியான சாந்தி மூலம் ஜெம் கிரானைட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். கணேசன் மீது உள்ள நம்பகத்தன்மை காரணமாக சாந்தி, வீரமணிக்கு உதவியாளராக நியமித்துள்ளார். பிறகு வீரமணிக்கு பர்சனல் வேலைகளை சாந்தி ஆலோசனைப்படி செய்து வந்துள்ளார். சாந்தி வீரமணிக்காக இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை அழைத்து வந்து பங்களாவில் விடுவார்.

அப்போது கணேசன், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, வீரமணி வந்ததும் அவர்களை அறைக்கு அழைத்து வந்து விட்டுள்ளார். வீரமணி சென்ற பிறகு, அந்த அறையை சுத்தம் செய்து அடையாளங்களை அழித்து வந்துள்ளார். அப்போது வீரமணியுடன் இருந்த இளம் பெண்களுக்கு தேவையான பணம் உள்ளிட்ட உதவிகளை சாந்தி செய்துவிடுவார். பெண்களுக்கு உணவு, தங்கும் வசதிகள் என அனைத்து உதவிகளையும் கணேசன் செய்து வந்துள்ளார். வீரமணிக்கு பிடித்து இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை ‘டிப்ஸ்’ வழங்க கணேசனிடம் சொல்வார். அதன்படி அவரும் பணத்தை பெண்ணுக்கு டிப்ஸ் கொடுத்து வந்துள்ளார். இவ்வாறு கணேசன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *