முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தோட்டத்தில் மின் ஒயர்கள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பூர்வீக வீடு சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ளது. அங்கேயே தோட்டமும் உள்ளது. இந்த தோட்டத்தை எடப்பாடி பழனிசாமியின் மூத்த அண்ணன் கோவிந்தராஜூ பராமரித்து வருகிறார்.
கடந்த 2-ந் தேதி இரவு தோட்டத்துக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த மின் மோட்டார்களுக்கான ஒயர்களை திருடி சென்றுள்ளனர்.
மறுநாள் காலை தோட்டத்துக்கு சென்ற கோவிந்தராஜூ ஒயர்கள் காணாமல் போனது குறித்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் பூலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், மேட்டூர் அருகே சோனா ரப்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார் (வயது 40), பட்டாசு என்கிற ரஞ்சித் (23), முருகேசன் மகன் வினைகுமார் (27) மற்றும் மாரிமுத்து என்பவரின் மகன் கண்ணன் (33) ஆகிய 4 பேர் எடப்பாடி பழனிசாமியின் தோட்டத்தில் மோட்டார் ஒயர்களை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து குமார் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
