குனிச்சி பகுதியில் புதிய மின்கம்பம் அமைக்கும் பணியின்போது மின்கம்பம் உடைந்து விழுந்ததில் மேற்கு வங்க பணியாளர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தார்.
திருப்பத்தூர் அடுத்த குனிச்சி கொல்லக்கொட்டாய் பகுதியில் புதிய மின்கம்பம் அமைக்கும் பணி நடந்தது வந்துள்ளது.
இதில் மின்வாரிய ஒப்பந்ததாரரிடம் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த இர்ஃபான் மியா (26) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் புதிய மின்கம்பம் அமைக்கும் பணியில் இர்ஃபான் மியா ஈடுபட்டிருந்தார்.
மின்கம்பத்தை நட்ட பின்னர் அதன் மேற்பகுதியில் ஏறி வேலை செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தின் அடிப்பகுதி திடீரென உடைந்து மின்கம்பம் சரிந்து கீழே விழுந்தது. இதில் கம்பத்தின் மேற்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த இர்ஃபான் மியா கீழே விழுந்து அவர் தலையில் மின்கம்பமும் விழுந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த இர்ஃபான் மியாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் தரமானதாக இல்லை என்றும், கம்பத்தின் உள்ளே பயன்படுத்தப்பட்டுள்ள இரும்பு கம்பியின் அளவு குறைவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.மின்கம்பம் உடைந்து விழுந்ததில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த வாலிபர் உயிரிழந்துள்ள நிலையில்,இதே பகுதியில் எங்கள் குழந்தைகளும் தினமும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். எனவே தரமான மின்கம்பங்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.மேலும் தரமற்ற மின்கம்பங்களை வாங்கி பயன்படுத்திய ஒப்பந்ததாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.