திமிரி அடுத்த கருங்காலிக்குப்பம் கிராமத்தில் பள்ளி பேருந்து ஓட்டுநரை மூன்று மர்ம நபர்கள் கட்டையால் தாக்கியதில், பலத்த காயமடைந்த ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை பகுதியைச் சேர்ந்த இம்ரான் (38). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். கம்மவான்பேட்டையில் இறைச்சிக் கடை நடத்தி வந்த இவர், தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பள்ளி முடிந்ததும் மாணவ, மாணவிகளை கருங்காலிக்குப்பம் கிராமத்தில் இறக்கிவிட்டு, அதே வழியாக பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மூன்று மர்ம வாலிபர்கள், பேருந்தில் இருந்த ஓட்டுநர் இம்ரானை கட்டையால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த இம்ரான், பேருந்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இம்ரான் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திமிரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் கனகராஜ் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பள்ளி பேருந்து ஓட்டுநர் இம்ரான் தாக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், ஓட்டுநர் இம்ரானை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற மூன்று மர்ம வாலிபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
