தேனியில் வருசநாடு, மேகமலை உள்ளிட்ட மலை கிராம மக்களை வெளியேற்றுவதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் என் உயிர் போனால் தான், இந்த மக்களை வெளியேற்ற முடியும் என திமுக எம்எல்ஏ மகாராஜன் ஆவேசமாக பேசினார்.
வருஷநாடு, மேகமலை உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட மலை கிராம மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் வனத்துறையினரை கண்டித்து தமிழர் தேசம் கட்சி சார்பில் தேனி பங்களாமேடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மலைவாழ் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை நிறுத்த கோரியும், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் பேசும்போது, கடந்த ஆண்டு வரை வனத்துறையினரால் மக்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை ஆனால் தற்போது வந்துள்ளது.
வனத்துறைக்கு சொந்தமான இடம் என்றால் அதை நாங்கள் விட்டுக் கொடுத்து விடுகிறோம், அதற்கு முழுமையாக அளவீடு செய்ய வேண்டும், அதை விட்டுவிட்டு மக்களை வெளியேறு என்று சொன்னால் அவர்கள் எங்கே செல்வார்கள்?.
விவசாயிகள் போராடுகிறார்கள் என்பதால் விமான நிலையம் திட்டம் கைவிடப்பட்டது, ஆனால் எங்களின் போராட்டம் அரசின் கண்ணுக்கு தெரியவில்லையா?
வனத்துறைக்கு சொந்தமான இடத்திற்கும் இந்த மக்கள் வாழும் இடத்திற்கும் 10 கிலோமீட்டர் இடைவெளி உள்ளது அங்கு புலியும் இல்லை, எலியும் இல்லை, புளியமரம் கூட இல்லை, இந்த மக்கள் மீது அரசுக்கு அப்படி என்ன காழ்ப்புணர்ச்சி உள்ளது?
என் உயிர் போனால் தான் இந்த மக்களை வெளியேற்ற முடியும், மக்களை வெளியேற்ற துப்பாக்கிச் சூடு நடத்தினால் முதலில் என் நெஞ்சில் தான் குண்டு பாயும் என ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாக பேசினார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் பொதுமக்கள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த போதும், திமுக எம்எல்ஏ மகாராஜன்
அவர்களுடன் செல்லாமல் வருஷநாடு, மேகமலை பிரச்சனை குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
