வீட்டுமனை பட்டா மற்றும் விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ராணிப்பேட்டை
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம்வாலாஜா வட்டத்திற்கு உட்பட்ட நவ்லாக் புளியங்கண்ணு மற்றும் நவ்லாக் அவரக்கரை ஆகிய இரண்டு கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தங்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் தமிழக அரசு மற்றும் நீதிமன்றங்களை நாடி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்கள் வசித்து வரும் சுமார் 1605 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள், குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட கோவிந்ததாஸ் லாட் என்பவரின் வம்சாவளிகளுக்கு சொந்தமானது என உரிமை கோரப்படுவதாக கூறப்படுகிறது.
150 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் குடியிருப்புகள் அமைத்து விவசாயம் செய்து வரும் நிலையில், தற்போது நிலத்திற்கு உரிமை கோரப்படுவது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு தங்களுக்கு பட்டா வழங்கும் என எதிர்பார்த்து வந்த நிலையில், நவ்லாக் புளியங்கண்ணு மற்றும் நவ்லாக் அவரக்கரை ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும், வீட்டுமனை மற்றும் விவசாய நிலங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
150 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் தங்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
