கடலூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைத் தொடர்ந்து இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மீண்டும் மோதல் ஏற்பட்ட நிலையில், சண்டையை விலக்கச் சென்றவர் தலையில் தடியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் கீழ்க்கவரப்பட்டு மற்றும் மேல்க்கவரப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தங்கள் கிராமங்களில் இருந்து தனித்தனியாக மினி லாரிகளில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சிலைகளை கரைத்துள்ளனர்.
அப்போது இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இரு தரப்பினரும் அங்கிருந்து தங்களது கிராமங்களுக்கு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், மேல்க்கவரப்பட்டைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் கீழ்க்கவரப்பட்டைச் சேர்ந்த திருநாவுக்கரசு ஆகியோருக்கு ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதத்தின் தொடர்ச்சியாக சிலரிடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து விக்னேஷின் தாயார் மற்றும் அவரது குடும்பத்தினர், கீழ்க்கவரப்பட்டில் உள்ள திருநாவுக்கரசின் வீட்டுக்குச் சென்று இது தொடர்பாக கேட்கச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இந்த மோதல் திருநாவுக்கரசின் வீட்டுக்கு அருகே நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அப்போது கீழ்க்கவரப்பட்டைச் சேர்ந்த ராமு என்பவர், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையை விலக்குவதற்காக அங்கு சென்றுள்ளார். ராமு விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு சென்றவரோ அல்லது கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு சிலை கரைக்கச் சென்றவரோ அல்ல என்றும், ஊரில் ஏற்பட்ட சண்டையை விலக்குவதற்காக மட்டுமே சம்பவ இடத்துக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
சண்டையை விலக்க முயன்ற ராமுவை ஒருவர் தடியால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ராமு நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ராமுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
ராமுவின் உயிரிழப்பு குறித்து தகவல் அறிந்த போலீசார், கீழ்க்கவரப்பட்டு மற்றும் மேல்க்கவரப்பட்டு கிராமங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரு கிராமங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
உயிரிழந்த ராமுவின் உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ராமுவை தடியால் தாக்கியது யார் என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விக்னேஷ் மற்றும் திருநாவுக்கரசு இடையே ஏற்கனவே இருந்து வந்ததாக கூறப்படும் முன்விரோதம், தற்போதைய மோதலுக்கு காரணமா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து இரு கிராமங்களிலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
