திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ள திருமூர்த்தி அணையில், ‘அணையின் முழுமையான பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழு (Comprehensive Dam Safety Evaluation – CDSE) நேற்று நேரில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது.
தமிழ்நாடு அரசு நீர்வளத்துறையின் மாநில அணை பாதுகாப்பு அமைப்பு சார்பில், அணைகளின் கட்டமைப்பு, நீரியல் பாதுகாப்பு, இயந்திர மற்றும் மின் உபகரணங்களின் நிலை ஆகியவற்றை ஆய்வு செய்து பாதுகாப்புப் பணிகளை மேற்பார்வையிட இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய நீர் ஆணையத்தின் முன்னாள் சேர்மன் ஏ.கே.பஜாஜ் தலைமையிலான இந்தக் குழுவில், புவி தொழில்நுட்ப நிபுணர் டாக்டர் ஸ்ரீவத்சா கோலத்தையார், நீர்வளத்துறை ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர்கள் கே.பத்மநாபன் (நீரியல் நிபுணர்) மற்றும் ஆர்.செல்வம் (வடிவமைப்பு நிபுணர்), பரம்பிக்குளம் ஆழியாறு வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் எம்.கார்த்திகேயன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் நேற்று திருமூர்த்தி அணைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, அணையின் கால்வாய் மதகுகள், ஆற்று மதகுகள், உபரிநீர் வெளியேற்றி மற்றும் மண் கரையின் ஸ்திரத்தன்மை ஆகியவை குறித்துத் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், அணையின் பாதுகாப்புக் கருதி இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகளைப் பார்வையிட்ட குழுவினர், இனி வருங்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமான பாதுகாப்புப் பணிகள் குறித்தான அறிவுரைகளையும் அதிகாரிகளுக்கு வழங்கினர்.
இந்த ஆய்வின் போது, திருமூர்த்திக் கோட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் தி.ரா.பிரபாகரன், மண் அணை உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் கு.அசக்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
