Headlines

டேங்கர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து – ஓட்டுநர் உயிரிழப்பு , 7 பேர் படுகாயம்

டேங்கர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து - ஓட்டுநர் உயிரிழப்பு , 7 பேர் படுகாயம்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தண்ணீர் டேங்கர் லாரி மீது அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில், பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 7 பேர் படுகாயமடைந்தனர்.

பாலக்கோடு அருகே கொலசனஅள்ளி தேசிய நெடுஞ்சாலையில்
சாலையோர செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் டேங்கர் லாரி ஈடுபட்டிருந்தது.

அப்போது பெங்களூருவில் இருந்து 42 பயணிகளுடன் சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சேலம் கோட்ட அரசு விரைவுப் பேருந்து, எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி மீது மோதியது.

மோதிய வேகத்தில் பேருந்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. இதில் பேருந்து ஓட்டுநர் சரவணன் இடிபாடுகளில் சிக்கி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தில் பேருந்து நடத்துநர் சங்கர் மற்றும் பயணிகளான திருச்செங்கோடு மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த திவ்யா (36), சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீபனி (25), திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியைச் சேர்ந்த திவ்யா (23), புதுக்கோட்டையைச் சேர்ந்த கார்த்தி (33), கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த மதன் கிறிஸ்டோபர் (24), மதுரையைச் சேர்ந்த அசோக்குமார் (41) ஆகிய 3 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மற்றும் மீட்புப் பணியாளர்கள், காயமடைந்தவர்களை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த ஓட்டுநர் சரவணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து மகேந்திரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *