Headlines

பொள்ளாச்சி டாஸ்மாக் கடையில் கூடுதல் பணம் வசூல் : ஆதாரங்களுடன் புகார் அளித்த சமூக ஆர்வலர்

பொள்ளாச்சி டாஸ்மாக் கடையில் கூடுதல் பணம் வசூல் : ஆதாரங்களுடன் புகார் அளித்த சமூக ஆர்வலர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடையில், மதுபாட்டிலின் விலையைவிட கூடுதலாக பணம் வசூலித்ததாகவும், இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது ஊழியர் ஆணவமாக பதிலளித்ததாகவும் கூறி வாடிக்கையாளர் ஒருவர் மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் புகார் அளித்துள்ளார்.

பொள்ளாச்சி குரும்பபாளையத்தைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி என்பவர் அளித்துள்ள புகாரில், கடந்த 24.9.2026 அன்று இரவு 8.34 மணியளவில் பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடை எண் 2043-க்கு மதுபானம் வாங்கச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

அப்போது KING LOUIS (XIV) XO என்ற மதுபானத்தை கேட்டதாகவும், விற்பனையாளர் பாட்டிலை வழங்கியதுடன் ₹530 பணம் கேட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, தான் Google Pay (GPay) மூலம் ₹530 செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் பாட்டிலைப் பிரித்து பார்த்தபோது, பாட்டிலில் ₹500 என்றும், அதன் லேபிளில் ₹10 என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், இதனால் மதுபானத்தின் விலை குறித்து சந்தேகம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து ஊழியர்களிடம் கேள்வி எழுப்பியபோது, ஏன் ₹530 வசூலிக்கப்பட்டது என்றும், கடையில் உரிய விலைப்பட்டியல் அல்லது லேபிள் இல்லை என்றும் கேட்டதாக தெரிவித்துள்ளார்.

அதற்கு அங்கிருந்த ஊழியர், “அப்படித்தான்; இது தவெக கட்சி சூப்பர்வைசர் கடை. நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் புகார் தெரிவித்தாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை” என்று ஆணவமாக பேசியதாகவும் புகாரில் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் தேவையற்ற பிரச்சினை வேண்டாம் என கருதி அங்கிருந்து திரும்பிச் சென்றதாகவும் முத்துக்குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை எண் 2043-ல் பணியாற்றும் உதவி விற்பனையாளர், விற்பனையாளர் மற்றும் கடை மேற்பார்வையாளர் ஆகியோர் மீது உரிய விசாரணை நடத்தி, தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவை தெற்கு மாவட்ட டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு மதுபாட்டிலின் விலை தொடர்பாக கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டதாக வாடிக்கையாளர் அளித்துள்ள இந்தப் புகார், டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது. புகார் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாடிக்கையாளர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *