தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே வீடு கட்டித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, கருப்பு நிற நோட்டுகள் மற்றும் செல்லாத வெளிநாட்டு டாலர்களை கொடுத்து ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட எஸ்.பி., அருண் கபிலனிடம் புகார் மனு அளித்தனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, காரகூர், ஏரியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நல்லம்பள்ளி அடுத்த கொட்டாம்பட்டி கிராமத்தில் அன்னை தெரசா அறக்கட்டளை நடத்தி வருவதாகக் கூறும் சின்னப்பன் என்பவர், எங்களை அணுகி வீடு கட்டித் தருவதாகக் கூறினார். கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஒவ்வொருவரிடமும் தவணை முறையில் 7 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டார்.
பல ஆண்டுகள் கடந்தும் வீடு கட்டித் தராததால், கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டோம். தொடர்ந்து காலதாமதம் செய்து வந்தார். இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன்பு, வங்கி மூலம் பேக்கிங் செய்யப்பட்டதாகக் கூறப்படும் கருப்பு நிற ரூபாய் நோட்டுக் கட்டுகளை எங்களிடம் கொடுத்து, அவற்றை ரசாயன முறையில் சுத்தம் செய்தால் வெளிநாட்டு டாலராக மாற்ற முடியும் என்றார்.
மேலும், தன்னிடம் பழைய வெளிநாட்டு டாலர் நோட்டுகள் இருப்பதாகவும், அவற்றை விற்பனை செய்தால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்றும் கூறி, அந்த நோட்டுகளையும் எங்களிடம் கொடுத்தார்.
பின்னர், அந்த கருப்பு நிற நோட்டுகளும், வெளிநாட்டு டாலர்களும் பயன்படுத்த முடியாதவை என்பதும், நாங்கள் ஏமாற்றப்பட்டதும் தெரியவந்தது.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாகவும், எனவே பணத்தை மீட்டுத் தருவதுடன், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புகார் மனுவை பெற்றுக்கொண்ட எஸ்.பி., அருண் கபிலன், இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
