தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் வீட்டு தோட்டத்தில் நடமாடிய அரியவகை நட்சத்திர ஆமையை வீட்டின் உரிமையாளர் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மாரண்டஅள்ளி பாலசுப்பிரமணியம் தெருவைச் சேர்ந்தவர் ராமன். இவர் நேற்று தனது வீட்டு தோட்டத்தில் செடிகளை கவனித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ஏதோ ஒன்று மெதுவாக ஊர்ந்து செல்வதை கண்டார். அருகில் சென்று பார்த்தபோது, முதுகில் அழகான நட்சத்திர வடிவ கோடுகளுடன் கூடிய ஆமை ஒன்று இருப்பது தெரியவந்தது.
இது சாதாரண ஆமை அல்ல, அரியவகை நட்சத்திர ஆமை என்பதை அறிந்த ராமன், உடனடியாக பாலக்கோடு வனச்சரக அலுவலர் கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை பணியாளர்களிடம் அந்த ஆமையை ராமன் பத்திரமாக ஒப்படைத்தார். இதையடுத்து வனத்துறையினர் ஆமையை பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் பாதுகாப்பான இடத்தில் விடுவித்தனர்.
வீட்டு தோட்டத்தில் எதிர்பாராத விதமாக அரியவகை நட்சத்திர ஆமை சிக்கியது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேவேளையில் ஆமையை பிடித்து வீட்டில் வைத்துக் கொள்ளாமல் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்து ஒப்படைத்த ராமனின் செயலை வனத்துறையினர் பாராட்டினர்.
