கோவை மாவட்டம் வால்பாறை அருகே வீட்டின் வாசலில் தாயுடன் அமர்ந்திருந்த 5 வயது சிறுவனை தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறை அருகே உள்ள அப்பர் பாரலை எஸ்டேட் பகுதியில் குருசாமி – நாகஜோதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளார். அந்த சிறுவன் அங்குள்ள எஸ்டேட் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன், தனது தாயுடன் வீட்டின் வாசலில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென வீட்டின் அருகே வந்து சிறுவனை தாக்கியது.
சிறுத்தையின் தாக்குதலில் சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய், சிறுத்தையிடம் இருந்து தனது மகனை போராடி பிடித்து இழுத்து மீட்டதாக கூறப்படுகிறது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, அவரை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுவனுக்கு முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுத்தை தாக்கிய சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதே அப்பர் பாரலை எஸ்டேட் பகுதியில் கடந்த ஆண்டு வடமாநிலத்தைச் சேர்ந்த குழந்தை சிறுத்தை தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது மீண்டும் சிறுத்தை தாக்குதலில் சிறுவன் படுகாயமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
