Headlines

சிவகங்கை அருகே கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 மாணவிகள் காயம்

சிவகங்கை அருகே கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 மாணவிகள் காயம்

சிவகங்கை அருகே மாணவிகளை ஏற்றிச் சென்ற தனியார் கல்லூரி பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்த விபத்தில் 15 மாணவிகள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த 7 மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பூவந்தியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு கல்லூரி பேருந்து சிவகங்கை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து ஏனாதி அருகே வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பேருந்தில் சிக்கியிருந்த மாணவிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15 மாணவிகள் காயமடைந்தனர். அவர்களில் படுகாயமடைந்த 7 மாணவிகள் உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பூவந்தி போலீசார், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், தகவல் அறிந்து மருத்துவமனை மற்றும் விபத்து நடந்த இடத்திற்கு வந்த மாணவிகளின் பெற்றோர்கள், ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாக குற்றம்சாட்டினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *