Headlines

சேதமடைந்த சாலை : கப்பி கற்களை ஏந்தி பெண்கள் போராட்டம்

சேதமடைந்த சாலை : கப்பி கற்களை ஏந்தி பெண்கள் போராட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பள்ளி கிழக்கு பகுதியில், அடிப்படை வசதியான சாலை வசதி கூட இன்றி சுமார் 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 30 ஆண்டுகளாக பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள பிரதான நடுத் தெரு சாலை, கடந்த மூன்று தசாப்தங்களாக எவ்வித பராமரிப்பும் செய்யப்படாமல் முற்றிலும் சிதிலமடைந்துள்ளது.
தார்ச் சாலை தடம் தெரியாமல் அழிந்து, சாலையில் போடப்பட்ட ஜல்லிக் கற்கள் (கப்பி) அனைத்தும் பெயர்ந்து கூர்மையான கற்களாக மாறி பாதசாரிகளையும் வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தி வருகிறது.

இச்சாலையை நம்பியே அப்பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு நடுநிலைப் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. நடுநிலைப் பள்ளியில் படிப்பை முடிக்கும் மாணவ-மாணவிகள், தங்கள் மேல்நிலைப் படிப்பிற்காக நாள்தோறும் காமேஸ்வரம் மற்றும் விழுந்தமாவடி ஆகிய ஊர்களுக்கு சைக்கிள்களிலேயே செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

சாலையில் கப்பி கற்கள் சிதறிக் கிடப்பதால், சைக்கிளில் செல்லும் மாணவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைகின்றனர். குறிப்பாக தற்போதைய மழைக்காலங்களில் சாலை முழுவதும் கழிவுநீரும் சேறும் சகதியுமாக மாறி குளம்போல காட்சியளிக்கிறது. இதனால் சீருடைகளுடன் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் சகதி பூசிய உடைகளுடன் மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டிற்குத் திரும்பும் அவலநிலை தொடர்கிறது.

அப்பகுதியில் உள்ள முதியவர்கள் நடந்து செல்லும்போது கூர்மையான ஜல்லிக் கற்கள் கால்களில் குத்தி படுகாயமடைகின்றனர்.

மேலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள்கள் அடிக்கடி பஞ்சராகி உழைக்கும் எளிய மக்களுக்கு பொருளாதார ரீதியாகவும் பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது.

அனைத்திற்கும் மேலாக, நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசரக் காலத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்தால், சாலை மிகவும் மோசமாக இருப்பதால் குடியிருப்பு பகுதிக்குள் ஆம்புலன்ஸ் வந்து சேர நீண்ட நேரமாகிறது. இதனால் உயிர் காக்கும் அவசர சிகிச்சைகள் கூட உரிய நேரத்தில் கிடைக்காமல் போகும் ஆபத்து நிலவுகிறது.

பலமுறை அதிகாரிகளிடமும் மக்கள் பிரதிநிதிகளிடமும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், இன்று திரண்டு வந்து வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதிலமடைந்த சாலையில் அமர்ந்து, சாலையில் பெயர்ந்து கிடந்த கப்பி கற்களை தங்கள் கைகளில் ஏந்தியவாறு, அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்து கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.

30 ஆண்டுகால மக்களின் இந்த நியாயமான கோரிக்கையை மாவட்ட நிர்வாகமும், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளும் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் புதிய தார்ச் சாலை அமைத்துத் தர வேண்டும் என்பதே புதுப்பள்ளி கிழக்கு பகுதி மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *