கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அரிய வகை நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கி வருகின்றன. இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர்.
மூணாறில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொரண்டிக்காடு அருகே, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நீலக்குறிஞ்சி மலர்கள் மலர்ந்துள்ளன. பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் இந்த மலர்களை காணும் சுற்றுலா பயணிகள், இயற்கை எழிலை ரசிப்பதுடன், மலர்களுடன் புகைப்படங்களும் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
நீலக்குறிஞ்சி மலர்களை காண காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரள சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் சார்பில் பெரியவர்களுக்கு ரூ.250, 6 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மூணாறு மற்றும் மாட்டுப்பெட்டி பகுதிகளில் இருந்து கொரண்டிக்காடு வரை கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கொரண்டிக்காடு பகுதியில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டால், நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள மலைப்பகுதியை சென்றடையலாம். நீல நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகள், தற்போது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
