தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் பெத்தகஞ்சிரலா கிராமத்தில் நேற்று இரவு விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி அந்த பகுதியில் உள்ள குளத்தில் நடைபெற்றது.
முன்னதாக ஊரில் கொலு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. விநாயகர் சிலையுடன் அந்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்கு சென்றனர்.

சிலையை ஊருக்கு வெளியே உள்ள குளம் ஒன்றில் இறக்கி தண்ணீரில் கரைத்தனர்.
அப்போது ஆர்வ மிகுதியில் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றவர்களில் நரசிம்மராஜு மற்றும் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படிக்கும் சுமந்த், கணேஷ், டிப்ளமோ மூன்றாம் ஆண்டு படிக்கும் உதய் கிரண், டிப்ளமோ முதலாம் ஆண்டு படிக்கும் ஷியாம் குமார்,, பத்தாம் வகுப்பு படிக்கும் சித்தார்த் ஆகிய ஆறு பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று கிராம பொதுமக்கள் உதவியுடன் ஆறு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரே கிராமத்தை சேர்ந்த ஆறு பேர் நீரில் மூழ்கி மரணமடைந்தது அந்த கிராமத்தில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
