தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் அரசு பள்ளி மாணவிகளை தமிழக கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
கோவில்பட்டி அருகே உள்ள சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி உமா மகேஸ்வரி தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தை மனப்பாடம் செய்து 22 மணி நேரத்தில் இடைவிடாமல் எழுதி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
மேலும், சிப்பிப்பாறை மற்றும் சுப்பையாபுரம் அரசு மேல்நிலை பள்ளி மாணவிகள் வீரச்செல்வி, வேணி ஆகியோர் சிலப்பதிகாரத்தை முற்றோதல் செய்து சாதனை படைத்தனர்.
மேலும், மாணவிகள் மதுஸ்ரீ, அனுஷா, யாசினி, பவித்ரா, சாருமதி, மாதவி, ஸ்ரீ வர்ஷினி ஆகியோர் திருக்குறளை தலைகீழாக எழுதி சாதனை படைத்தனர்.
இந்த நிலையில், தமிழ் மொழியில் சிறந்து விளங்கி இத்தகைய சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிகளையும், அவர்களுக்கு பயிற்சி அளித்து சாதனை படைக்க உறுதுணையாக இருந்த சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை ஜான்சிராணி, சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் ராஜசேகர் ஆகியோரையும் தமிழக கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
அப்போது, தமிழ் மொழியில் சிறந்து விளங்கி பல்வேறு சாதனைகள் படைத்த அரசு பள்ளி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். மேலும், மாணவிகள் மென்மேலும் பல்வேறு சாதனைகள் படைக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார்.
அப்போது, முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். மாணவிகளின் கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர் ராஜ்மோகன், முதலமைச்சர் விஜய்யை சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
இந்நிகழ்வில், விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் அரவிந்தன், தமிழக வெற்றிக்கழக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சித்ரா, கட்சி நிர்வாகி சத்யா செல்வின், கோவில்பட்டி மகிழ்வோர் மன்ற பொறுப்பாளர் செல்வின் ஆகியோர் உடன் இருந்தனர்.
