Headlines

டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள் : ஆபாசமாக பேசிய குடிமகன்கள்

டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள் : ஆபாசமாக பேசிய குடிமகன்கள்

சோமனூரில் வழிபாட்டுத் தளத்திற்கு அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி
அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி நகராட்சி, சோமனூர் நொய்யல் ஆற்றுக்கு அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடை எண் 2270-ஐ உடனடியாக அகற்ற வேண்டும் என பெண்கள் அதிரடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தக் கடை பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதாகவும், அருகிலுள்ள வழிபாட்டுத் தளத்திற்கு 300 மீட்டருக்குள் செயல்படுவதாகவும் பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த சூழலில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மதுபானம் வாங்க வந்த மதுப்பிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆபாசமாக பேசினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியது.

இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த கருமத்தம்பட்டி போலீசார், அங்கு திரண்டிருந்த மதுப்பிரியர்களை அப்புறப்படுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “இந்த மதுக்கடையை அகற்றுவதற்கு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்வோம்” என போலீசார் உறுதியளித்தனர்.

இதையடுத்து பெண்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் இந்த மதுக்கடையை உடனடியாக அகற்றாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *