ஈரோடு மாவட்டம் பெருந்துறை முதல் சென்னிமலை அத்திக்காடு வரையிலான நான்கு வழிச்சாலை பணிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்கி, குறித்த காலத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 2026–27-ன் கீழ் ரூ.65.50 கோடி மதிப்பீட்டில், ஈரோடு–பெருந்துறை–காங்கயம் மாநில நெடுஞ்சாலையில், பெருந்துறை பழைய பேருந்து நிலையம் முதல் சென்னிமலை அத்திக்காடு வரையிலான இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி தொடங்கப்பட்டன.
பணிகள் தொடங்கியதைத் தொடர்ந்து, சாலையை அகலப்படுத்துவதற்காக இருபுறங்களிலும் பள்ளங்கள் தோண்டப்பட்டதுடன், பல்வேறு இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வந்தன.
ஆனால், தற்போது பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தினசரி இந்தச் சாலையை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, சாலையின் இருபுறங்களிலும் தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் மற்றும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பணிகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக ஒப்பந்ததாரர் பணிகளை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், முக்கியமான மாநில நெடுஞ்சாலைப் பணிகள் நீண்டகாலம் முடங்குவது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரருடன் ஆலோசித்து, நிறுத்தப்பட்டுள்ள பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும்; பணிகளை தரமாகவும் குறித்த காலத்திற்குள்ளும் நிறைவு செய்ய வேண்டும்; சாலையோர பள்ளங்கள் மற்றும் அபாயகரமான பகுதிகளில் பாதுகாப்புத் தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் மற்றும் இரவு நேர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்; பணிகளின் முன்னேற்றத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் வலியுறுத்தியுள்ளார்.
பெருந்துறை–சென்னிமலை சாலை பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்திற்கு மிகவும் முக்கியமான சாலையாக இருப்பதால், பணிகளில் மேலும் காலதாமதம் ஏற்படாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
