Headlines

பள்ளி வேன் மீது மோதிய லாரி : ஓட்டுநர் உயிரிழப்பு, மாணவர்கள் காயம்

பள்ளி வேன் மீது மோதிய லாரி : ஓட்டுநர் உயிரிழப்பு, மாணவர்கள் காயம்

சிவகங்கை அருகே பள்ளி வேன் மீது லாரி மோதிய கோர விபத்தில் பள்ளி வேன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 9 மாணவ, மாணவிகள் மற்றும் ஒரு உதவியாளர் காயமடைந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அருகே இடையமேலூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிக்காக சில மாணவ, மாணவிகளை அழைத்து வர பள்ளி வேன் ஒன்று சென்றது.

கோமாளிப்பட்டி கிராபைட் தொழிற்சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி வேன் மீது நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த சிவகங்கைச் சேர்ந்த எத்திராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேனில் பயணம் செய்த 9 மாணவ, மாணவிகள் மற்றும் ஒரு உதவியாளர் காயமடைந்தனர்.

விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை தாலுகா காவல் நிலைய போலீசார், உயிரிழந்த எத்திராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையிலும் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

சிவகங்கை அருகே பள்ளி வேன் விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்து மாணவர்கள் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *