டெல்லியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்துக்கு வெளியே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணாவின் சோனிபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பிரமோத் தாஹியா என்பவர், டெல்லியில் நரேலா பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு வழக்கம் போல் இன்று காலை வந்துள்ளார்.
பயிற்சியை முடித்துவிட்டு வெளியே வந்த அவரை, இரு சக்கர வாகனத்தின் வந்த அடையாளம் தெரியாத இருவர் சரமாரியாக சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட்டனர்.
இதுதொடர்பாக டெல்லி காவல்துறை கூறுகையில், இந்த கொலை சம்பவம் காலை 7.15 மணியளவில் நடந்துள்ளது. முதல்கட்டத் தகவலின்படி, இருவர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கொல்லப்பட்டவரை குறிவைத்து 16 முறை சுட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவரின் உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது.
உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளோம். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகின்றன என்றனர்.
கடந்த 8 நாள்களில் நடைபெறும் இரண்டாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும். கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி, பாடகரும் யூடியூபருமான அங்கித் பாலியன், இதேபோன்றுதான் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உடற்பயிற்சி கூடத்திலிருந்து வெளியே வந்த அங்கித் பாலியானை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.
உத்திர பிரதேஷ் காவல்துறையின் விசாரணையில் கொலை சம்பவத்தை நிகழ்த்தியது கோகி கும்பல் என்று சந்தேகிக்கப்படுகிறதுஇதனிடையே, ஆகஸ்ட் 31 ஆம் தேதி, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். மீதமுள்ள இருவரைத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், அங்கித் பாலியன் கொலைக்கும் இன்று டெல்லியில் நடைபெற்ற கொலைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணையை டெல்லி காவல்துறையினர் தீவிரபடுத்தி உள்ளனர்.
