திருப்பூர் மாவட்டம் கண்டியன் கோவில் அருகே பூசாரி பாளையம், தளிஞ்சி காட்டு தோட்டத்தில் விவசாயிக்கு இழப்பீடு வழங்காமல் ஐ டி பி எல் எரிவாயு, எண்ணெய் குழாய் பதிக்கும் பணியை செய்வதாகவும் ஏராளமான போலீசார் உதவியுடன் விவசாயிகளை மிரட்டி பணிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டி விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் பணியை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் உடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரையும் போலீசார் கைது செய்து அலகுமலை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் இருகூரிலிருந்து பெங்களூரு தேவனகொந்தி வரை பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஐ டி பி எல் எண்ணெய் குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது.
இதில் திருப்பூர் மாவட்டத்தில் 70 கிலோமீட்டர் தொலைவில் மட்டும் விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது.

மற்ற இடங்களில் நெடுஞ்சாலை ஓரம் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கூடுதல் இழப்பீடு கோரியும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் விவசாயிகள் எதிர்ப்பை மீறி தொடர்ந்து எண்ணெய் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு ஆங்காங்கே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு பணி தொடர்வது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
