திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி ஏரியில் ரூ.8 கோடி அளவில் மண்ணை சட்டவிரோதமாக அள்ளியதாகவும், அந்த மண்ணை கொட்டிதான் நிலத்தை சமன்படுத்தி 2025-ல் திமுக இளைஞர் அணி மாநாடு நடத்தியதாகவும் முன்னாள் அமைச்சர் எ வ வேலு, அவர் மகன் குமரன் மற்றும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மகன் குமரன் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரரிடம் இருந்து 124 ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கியதாகவும் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.


இந்நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட கனிமவளத்துறை அலுவலர், மாநகராட்சி ஆணையர், வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மலப்பாம்பாடி கிராமத்தில் உள்ள ஏரிக்கு சென்று எவ்வளவு மண் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்றும், எத்தனை லாரி லோடு மண் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்றும், எத்தனை அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது என்றும், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு முடிவுகளை மாவட்ட ஆட்சியர் இடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.
