புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே
இடி தாக்கியதில் பந்தயத்திற்காக ஆசையாய் வளர்த்த காளை மாட்டுடன், கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்தையே சோகத்தில் ஆழத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த தெற்கு மஞ்சகரை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவருடைய மகன்
பூவரசன்(18). இவர் புதுக்கோட்டையில் உள்ள மாமன்னர் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை
2-ம் ஆண்டு படித்து வரும் நிலையில் மாட்டுவண்டி பந்தயத்திற்கான பந்தய மாடுகளையும் வளர்த்து வந்துள்ளார்.
கல்லூரி முடித்து நேற்று மாலை வீடு திரும்பிய நிலையில் மஞ்ச கரை மற்றும் அறந்தாங்கி பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
தொடர்ந்து மழை பெய்ததால் மழையில் நனைந்த பந்தய மாடுகளை மாட்டு கொட்டையில் கட்டுவதற்காக கல்லூரி மாணவர் பூவரசன் மாட்டை அவிழ்த்து கொண்டு சென்ற நிலையில் திடீரென இடி தாக்கியதில் பந்தயமாடும், மாணவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இடிதாக்கி மாணவர் பூவரசனும், மாடும் இறந்ததைக் கண்ட குடும்பத்தினர் கதறி அழுத நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இடி தாக்கி உயிர் இழந்த மாணவர் பூவரசன் பந்தய மாடு வளர்த்து பந்தயம் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்றும் ,மாடுகளை தன் உடன் பிறந்தவர்களை போன்று அன்பாய் வளர்த்து வந்த நிலையில் அவர் ஆசையாய் வளர்த்த பந்தய மாட்டோடு இடிதாக்கி இறந்த சம்பவம் அந்த கிராமத்தையே பெரும் சோகத்தில் மூழ்க வைத்துள்ளது.
