Headlines

யூடியூபர் வீட்டின் 118 சவரன் நகை, பணம் கொள்ளை : யூடியூபில் பதிவேற்றிய காட்சிகளால் கொள்ளையா? – போலீசார் விசாரணை

யூடியூபர் வீட்டின் 118 சவரன் நகை, பணம் கொள்ளை : யூடியூபில் பதிவேற்றிய காட்சிகளால் கொள்ளையா? - போலீசார் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பிரபல யூடியூபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 118 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் பகுதியில் விஐபி கார்டன் அமைந்துள்ளது. இப்பகுதியில் பிரபல யூடியூபர் வினோத்குமார் மற்றும் அவரது மனைவி மதுமிதா வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த 118 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

கொள்ளை குறித்து தகவல் அறிந்த ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், வீட்டிலும் சுற்றுப்புறப் பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையர்களின் நடமாட்டம் குறித்த தடயங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட யூடியூபர் தம்பதியினர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் அதிக அளவிலான தங்க நகைகள் மற்றும் கட்டுக்கட்டாக பணத்துடன் இருக்கும் காட்சிகளை அவ்வப்போது பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற பதிவுகள் கொள்ளையர்களுக்கு வீட்டில் நகை மற்றும் பணம் இருப்பது குறித்த தகவலை அளித்திருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.

யூடியூபர் வீட்டின் 118 சவரன் நகை, பணம் கொள்ளை : யூடியூபில் பதிவேற்றிய காட்சிகளால் கொள்ளையா? - போலீசார் விசாரணை

விஐபி கார்டன் பகுதியில் பல வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. இத்தகைய கண்காணிப்பு வசதிகள் நிறைந்த பகுதியில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை நடைபெற்றிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார், அவர்கள் எவ்வாறு அப்பகுதிக்குள் வந்து சென்றனர், கண்காணிப்பு கேமரா காட்சிகளில் அவர்களின் உருவம் பதிவாகியுள்ளதா என்பது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *