Headlines

ஒரே இரவில் இருவேறு கொலைகள் : விருதுநகரில் பரபரப்பு

ஒரே இரவில் இருவேறு கொலைகள் : விருதுநகரில் பரபரப்பு

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே இரவில் இரண்டு இடங்களில் கொலை சம்பவங்கள் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாமியாரை கொன்ற மருமகன்

விருதுநகர் அருகே பாலையம்பட்டியை சேர்ந்த சிவா இன்டஸ்ட்ராகிராம் மூலம் அறிமுகமான செவல்பட்டியை சேர்ந்த வாசக தேவி என்ற பெண்ணிடம் பழகி நாளடைவில் அது காதலாக மாறி கடந்த 6 மாதத்திற்கு முன் இருவரும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.

ஒரு வாரம் மட்டும் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் சிவா மதுபோதையில் தினந்தோறும் மனைவி வாசகா தேவியை தொந்தரவு செய்ததால் மன உளைச்சலில் கணவரை பிரிந்து விருதுநகர் அருகே செவல்பட்டியில் உள்ள அவரது தாய் சாந்தி வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நள்ளிரவில் தனது மனைவி வாசக தேவியை சமாதானப்படுத்தி தன்னுடன் அழைத்து செல்வதற்காக மது போதையில் மாமியார் வீட்டிற்கு சென்ற சிவா, தனது மனைவியை தாக்கி வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து இழுத்து சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது தனது மகளை செல்ல விடாமல் தடுத்து மாமியார் சாந்தி 55, மற்றும் மனைவியின் சகோதரர் சாமி முருகனையும் 32, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மாமியர் சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சாமி முருகன் 32 பலத்த காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை செய்த சிவாவை சூலக்கரை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில், தனது மனைவியை தன்னுடன் வாழாமல் மாமியார் சாந்தி தொடர்ந்து தடுத்து வந்ததால், ஆத்திரத்தில் அவரை கொலை செய்யும் நோக்கில் கத்தியுடன் வந்ததாகவும், தான் எதிர்பார்த்ததுபோல் தகராறில் ஈடுபட்ட மாமியாரை ஆத்திரத்தில் குத்தி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இந்துமுன்ணணி பிரமுகர் கொலை

இதேபோல் மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை சேர்ந்த இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகி தணிகாசலம் (46), நெல்லையில் துக்க நிகழ்விற்கு சென்றுவிட்டு மீண்டும் மதுரை செல்வதற்காக ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் தணிகாசலத்தை கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளது. ரத்த வெள்ளத்தில் சரிந்த தணிகாசலத்தை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்து கொலை செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே இரவில் இருவேறு கொலை சம்பவம் நடந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் 4 கொலைகள் நடந்துள்ளது நிலையில் இதுபோன்ற தொடர் குற்ற சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *