Headlines

கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு – விஜயவாடாவில்துயர சம்பவம்

கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு – விஜயவாடாவில்துயர சம்பவம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில், கொதிக்கும் சாம்பார் இருந்த பாத்திரத்தில் தவறி விழுந்து படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஆந்திர மாநிலம் விஜயவாடா சிட்டிநகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, கொதிக்கும் சாம்பார் நிரப்பப்பட்ட அண்டாவை கீழே இறக்கி வைக்கும் பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த சுஜாதா என்ற பெண், கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் சுஜாதாவை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே, விபத்து நடந்தபோது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அன்னதான நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் ஏதேனும் பாதுகாப்புக் குறைபாடு அல்லது அலட்சியம் இருந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் ஏற்பட்ட இந்த துயர சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *