உளுந்தூர்பேட்டை அருகே பூர்வீக சொத்தின் கூட்டுப் பட்டாவில் பெயர் சேர்க்க கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்ட நிலையில், கொடுக்க பணம் இல்லாததால் விவசாயி ஒருவர் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட எலவனாசூர்கோட்டை வருவாய் கிராமம் நொணைவாடி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது பூர்வீகச் சொத்துகளை கவனித்து வருகிறார். இந்நிலையில், அந்தச் சொத்தின் கூட்டுப் பட்டாவில் தனது பெயரைச் சேர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரான (வி.ஏ.ஓ) அசோக்குமார் என்பவரை அவர் அணுகியுள்ளார்.
அப்போது, பட்டாவில் பெயர் சேர்ப்பதற்கு அதிக அளவில் வி.ஏ.ஓ லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஏழை விவசாயியான தன்னிடம் பணம் இல்லாததால், லஞ்சம் கொடுக்க முடியாமல் அவர் மிகுந்த மனவேதனை அடைந்தார். அதிகாரியின் இந்தச் செயலால் விரக்தியடைந்த அவர், பொதுமக்களிடம் மூச்சு எடுத்து அந்தப் பணத்தை அதிகாரியிடம் லஞ்சமாகக் கொடுக்க முடிவு செய்தார்.
இதற்காக மஞ்சள் நிற பதாகை ஒன்றை கையில் ஏந்தியபடி உளுந்தூர்பேட்டை பகுதியில் அவர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கையில் வைத்திருந்த பதாகையில், “வாழ்க தமிழ், ஒழியட்டும் ஊழல். நொணைவாடியில் பூர்வீக சொத்தில் கூட்டு பட்டாவில் பெயர் சேர்க்க வி.ஏ.ஓ அசோக்குமார் என்னிடம் லஞ்சம் கேட்டார். என்னிடம் பணம் இல்லை. அதனால் மக்கள் மத்தியில் பிச்சை எடுக்கிறேன். எனக்கு மக்கள் பிச்சை கொடுத்து உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ஏமாந்த தமிழன்” என்று தனது குமுறலை வெளிப்படுத்தியிருந்தார்.
அரசு அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்டதால் மனமுடைந்த விவசாயி நடுத்தெருவில் பிச்சை எடுத்த இந்தச் சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
