நெல்லையில் டியூஷனில் படித்துக் கொண்டிருந்த இரு மாணவர்களை வெளியே அனுப்பக் கோரி வாக்குவாதம் செய்து டியூஷன் ஆசிரியரை சரமாரியாக தாக்கிய பிளஸ் 2 மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் மேலகல்லூர் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி சுரேஷ் (24), அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வருகிறார்.
வழக்கம்போல் சுரேஷ் டியூஷன் எடுத்துக் கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 படித்து வரும் இரண்டு மாணவர்கள் அங்கு வந்து, டியூஷனில் படித்துக் கொண்டிருந்த தங்களது இரு நண்பர்களை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளனர். அதற்கு சுரேஷ் மறுப்பு தெரிவிக்கவே, மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மாணவர்களை அழைத்துச் செல்ல அவர்களது பெற்றோரை நேரில் வருமாறு சுரேஷ் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இரண்டு மாணவர்களும் சுரேஷை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் காயமடைந்த சுரேஷ் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சுத்தமல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி, பிளஸ் 2 படிக்கும் இரு மாணவர்களையும் கையகப்படுத்தி, சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தி கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
