தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு சொந்தமான அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தொடர்புடைய அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக, வரப்பெற்ற தொடர் புகார்களின் அடிப்படையில், தற்போது தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி மண்டலம் – 2 அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அலுவலகத்துக்குள் நுழைந்து அங்கு பணிபுரியும் அலுவலர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊழியர்களின் GPAY உள்ளிட்ட வங்கி பரிவர்த்தனைகளும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
சோதனையின் முடிவிலேயே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சோதனையை ஒட்டி அலுவலகத்திற்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
