ஈரோடு மாவட்டம் தாளவாடி ஊராட்சிக்கு உட்பட்ட இரியபுரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக இப்பகுதி யில் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை . இதனால் குடிநீர் இல்லாமல் அருகில் உள்ள தோட்டங்களுக்குச் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் தோட்டங்களிலும் தண்ணீர் குறைவாக இருந்ததால் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். கடந்த சில நாட்களாக மழை நீரை சேமித்து அருந்தி வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர். ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று காலை இரியபுரம் இருந்து தாளவாடி செல்லும் சாலையில் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.
