Headlines

மஸ்கட் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை : தமிழக அரசுக்கு கோரிக்கை

மஸ்கட் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை : தமிழக அரசுக்கு கோரிக்கை

மஸ்கட் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில்,
அமைச்சர் வன்னியரசிடம் மனு அளித்த விசிக கரூர் மாவட்ட செயலாளர் ரிபாய்தீன் ஹசனி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், மஸ்கட்டில் வேலைக்குச் சென்று சிக்கித் தவிக்கும் தமிழர்கள், தங்களுக்கு நேரிடும் பிரச்னைகள் குறித்து தொலைபேசி வாயிலாக வீடியோ வெளியிட்டு, தமிழக அரசு தங்களை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், தமிழகத்தைச் சேர்ந்த 25 பேரை மஸ்கட்டில் வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, சில ஏஜென்ட்கள் வேறு பணிக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டினார்.

வேலைக்குச் சென்ற அவர்களுக்கு அங்கு முறையாக உணவு வழங்காமல் துன்புறுத்தியதாகவும், கடுமையான வேலை வாங்கியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதனால் அவர்கள் கடுமையான துயரத்திற்கு ஆளாகி, தற்போது மஸ்கட் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தூதரகத்தில் உள்ள ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கினால் மட்டுமே அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து ஏற்கனவே மனு அளித்திருந்த நிலையில், அமைச்சர் வன்னியரசிடமும் மனு அளித்ததாக ரிபாய்தீன் ஹசனி தெரிவித்தார்.

மஸ்கட்டில் தஞ்சம் அடைந்துள்ள 25 தமிழர்களையும் எப்படியாவது மீட்டு தமிழகத்திற்கு அழைத்து வர தமிழக அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் ரூ.50 ஆயிரம் தொகையை வழங்கியாவது அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விசிக கரூர் மாவட்ட செயலாளர் ரிபாய்தீன் ஹசனி வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *