காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் 22 ஆயிரம் கன அடி நீர் திறக்க வலியுறுத்தப்பட்ட நிலையில் 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் மூலம் பாசன வசதி பெறும் நிலப்பரப்புகள் தொடர்ந்து வறண்டு காணப்படும் நிலையில், போதிய அளவு நீரை கர்நாடகா திறந்து விட மறுத்து வருகிறது.
இந்நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநில அரசுகளின் நீர்வளத்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கர்நாடகாவின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் நீர்வரத்தும் குறைந்துள்ளதாகவும், எனவே கடந்த கூட்டத்தில் காவிரியில் கர்நாடக அரசு திறந்து விட உத்தரவிடப்பட்ட 9 ஆயிரம் கன அடி நீரை 2 ஆயிரம் கன அடி நீராக குறைக்க வேண்டும் என்றும் கர்நாடகா அரசு கோரிக்கை வைத்தது.
அதேவேளையில், தமிழ்நாட்டின் பல பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால், வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு கர்நாடக அணைகளில் போதிய அளவு நீர் இல்லை என கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இருதரப்பு கோரிக்கைகளையும் கேட்டுக்கொண்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழு, அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை வழங்கியது.
இதனையடுத்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதன் தலைவர் எஸ்.கே ஹால்தர் தலைமையில் இன்று மாலை 3 மணிக்கு கூடியது. அதில், காவிரி நீர் ஒழுங்காற்று குழு வழங்கிய பரிந்துரை குறித்து பரிசீலிக்கப்பட்ட நிலையில் அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
