கோவை பெரியநாயாக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை மலை கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டி, உறைவிடப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் கிருஷ்ணப்பிரியாவை இடமாற்றம் செய்யாவிட்டால், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ளது பாலமலை. இங்கு பெரும்பதி, குஞ்சூர்பதி, மாங்குளி, பசுமணி, பசுமது புதூர், பெருக்கை, பெருக்கை புதூர் உள்ளிட்ட 7 மலை கிராமங்களில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.
இங்கு யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்கு நடமாட்டம் அதிகம் உள்ளதாலும், வாகன வசதிகள் எதுவும் இல்லாததால் 1954ம் ஆண்டு அரசு பழங்குடியினர் உண்டி, உறைவிடப் பள்ளி கட்டப்பட்டு இங்கு பழங்குடியினர் படித்து வருகின்றனர். இங்கு தற்போது 43 பழங்குடியின மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு காலை, மதியம், மாலை என 3 நேரமும் வித விதமான சைவ, அசைவ உணவுகள், பால், பழம், சுண்டல் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்பட்டு வந்துள்ளது.
இங்கு தற்போது கிருஷ்ணப்பிரியா என்ற தலைமை ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவர் அங்கு படிக்கும் பழங்குடியின மாணவர்களை கடுமையாக தாக்குவதும், ஆசிரியர்களை அடிப்பதும், மாணவிகளைக் கொண்டு கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைப்பதும், மாலை உணவு வழங்காமல் பள்ளியை மதியமே பூட்டிவிட்டு செல்வதும், அசைவ உணவு மற்றும் அட்டவணையில் உள்ள உணவுகள் என எதையுமே வழங்காமல் கணக்கு காட்டி வருவதாகவும் புகார்கள் எழுந்தது.
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் 8ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் ஆதார் பயோ மெட்ரிக் சரிசெய்ய செல்போனை கொண்டுவரச் சொல்லியுள்ளார் தலைமை ஆசிரியை கிருஷ்ணப்பிரியா . போனில் சார்ஜர் தொலைந்துவிட்டதால் அம்மாணவி செல்போனில் சார்ஜ் இல்லை அதனால் கொண்டு வரவில்லை என தெரிவித்துள்ளார். அதற்குள் மாணவியின் கன்னத்தில் ஓங்கி பலமாக அறைந்துள்ளார். இதில் மாணவியில் கன்னத்தில் அவரின் 5 விரல்களும் பதிந்துள்ளது. வலியால் துடித்த மாணவி அழுதுகொண்டே வீட்டிற்கு சென்று பெற்றோரை அழைத்து வந்துள்ளார் அவர்களிடம் டிசி வாங்கிச் செல்லுங்கள் என்று மிரட்டி அனுப்பியுள்ளார். மேலும் கழிப்பறையை யாரோ அசிங்கம் செய்துவிட்டதாகவும் அதை நீங்கள் செய்தீர்கள் கூறி கழிப்பறையை மாணவிகளை வைத்து சுத்தம் செய்ய வைத்துள்ளார்.
அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் 5ம் வகுப்பு மாணவி ஒருவர் டெஸ்ட் எழுதிவிட்டு தலைமை ஆசிரியர் கிருஷ்ணப்பிரியா காண்பிக்க சொல்லியுள்ளார். அதனை காண்பித்த போது ஒரே டெஸ்ட்டை ஏன் எழுதிட்டே இருக்கிற என்று சொல்லி கையில் வைத்திருந்த பிரம்பால் கடுமையாக தாக்கியியுள்ளார். இதில் அம்மாணவியில் முதுகில் ரத்தக்கட்டு ஏற்படும் அளவிற்கு காயம் ஆகியுள்ளது.
அதே சமயம் அவர்களுக்கு பாடம் நடத்தி வந்த ஆசிரியையும் தலைமை ஆசிரியர் கிருஷ்ண வேணி அறைந்துள்ளார்.
வலியால் துடித்த மாணவி அழுதுகொண்டே வீட்டிற்கு வந்ததை பார்த்த அவரது பெற்றோர்கள் தலைமை ஆசிரியை சந்தித்து கேட்ட போது நான் அடிக்கவில்லை எனக்கூறியுள்ளார். இதையடுத்து அவர்களது மகளை நேரில் அழைத்து கேட்டபோது தலைமை ஆசிரியர்தான் தன்னை அடித்ததாக கூறியதைத் தொடர்ந்து எல்லா குழந்தைகளையும் அடிக்கும் போது லேசா பட்டிருக்கும் என அலட்சியமாக கூறியதுடன் முடிஞ்சா படிக்க வை இல்லைன்னா டிசி வாங்கிட்டு போ என்று கூறியுள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கப்போகிறேன் என்று கூறியதிற்கு உன்னால ஒன்னும் பன்ன முடியாது என ஆணவமாக பேசியுள்ளார். இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் தனது மகளை தலைமை ஆசிரியர் அடித்ததாக புகைப்பட ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார் மாணவியின் தந்தை. இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியர் கிருஷ்ணப்பிரியா யிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் மாணவியை அடித்ததை ஒத்துக்கொண்ட தலைமை ஆசிரியர் லேசாகத்தான் அடித்ததாகவும் அது இப்படி ஆகும் என எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகளை அடிக்கின்றார். கேட்டால் டிசி வாங்கிக்கொண்டு போ என்கிறார். இங்குள்ள குடிநீர் தொட்டியில் தவளை இறந்து கிடந்த தண்ணீரையே குடிக்கச் சொல்வதாகவும், சுத்தம் செய்யவே இல்லை என்றும், மைதானத்தை சுத்தம் செய்வது இல்லை, பி இ டி வகுப்புகள் நடப்பதே இல்லை, அதேபோல் தொண்டு நிறுவனங்கள் வழங்கும் உதவி பொருட்கள் மற்றும் உபகரணங்களை தலைமை ஆசிரியரே எடுத்துச்சென்றுவிடுவதாகவும் குற்றம் சாட்டினர். எனவே இதுபோல் குழந்தைகளை துண்புறுத்தும் இந்த தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யாவிட்டால் நாங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று தெரிவித்தனர்.
இது குறித்து அப்பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் சங்கீதா கூறும்போது இப்பள்ளிக்கு ஆய்விற்கு வரும்போது பள்ளியில் அட்டவணைப்படி உணவுகள் வழங்குவதில்லை என்பது தெரியவந்தது எனவும், குழந்தைகளை வைத்து கழிப்பறைகளை சுத்தப்படுத்துவது கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் பள்ளி முறையாக செயல்படுதில்லை எனவும் காலை 10 மணிக்கு மேல் தான் வருகிறார். மதியம் 2.30 க்கு சென்றுவிடுகின்றனர். மாலை உணவும் வழங்குவதில்லை என்றார்.
இது தொடர்பாக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிமேகலையிடம் கேட்டபோது, அந்த தலைமை ஆசிரியரை தற்போது கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளதாகவும், மேலும் இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையின் முடிவில் அதன் உண்மைத் தன்மையை கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
